அகரம்சீகூரில் சட்ட விரோதமாக மது விற்பனை; 94 மது பாட்டில்கள் பறிமுதல்
அகரம்சீகூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, 94 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குன்னம் தாலுகா, அகரம்சீகூர் டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் மது பாட்டில்களை விற்பனை செய்த அத்தியூர் வடக்கு தெருவை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 47) என்பவர் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து அங்கிருந்த 94 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர்.