ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி: நிதிநிறுவன நிர்வாக இயக்குநர் லட்சுமி நாராயணன் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம்...!

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன பண மோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-17 09:45 GMT

சென்னை,

சென்னையை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ். என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் செயல்பட்டு வந்தன. பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டன.

நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தி லட்சக்கணக்கில் முதலீடுகளும் பெறப்பட்டன. அந்த வகையில் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி வரை வசூலிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்டபடி, மாதந்தோறும் வட்டி தொகையை முறையாக வழங்கவில்லை. இதனால் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக வேலுார், ராணிப்பேட்டை, ஈரோடு உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை நடத்தி ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கம், 247 ஆவணங்கள், 40 பவுன் தங்கம் மற்றும் 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பண மோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த சென்னை ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த குப்புராஜ் (வயது 40), ராணிப்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் (34) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில் ஐஎப்எஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லட்சுமி நாராயணனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பே அவர் துபாய் தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது. வெளிநாடு சென்ற அவரை இன்டர்போல் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வர போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்