முககவசம் அணிந்தால்... வசமாகும் உயிர் பாதுகாப்பு!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. கொரோனா வைரசால் இதுவரை 63 கோடியே 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 61 கோடியே 7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Update: 2022-10-21 18:57 GMT

முககவசம்

கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் ஊடுருவிய போது மக்கள் உயிர் பயத்தில் முககவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தனர். சிலர் ஒரே நேரத்தில் 2 முககவசங்களை பயன்படுத்தினர். முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த தொற்று உயிர் பலி அதிகம் வாங்கிய நேரத்தில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் மத்தியில் பீதியும், அச்சமும் நிறைந்திருந்தது. தற்போது கொரோனாவின் வீரியம் குறைந்து போனதால் மக்கள் மத்தியில் அச்சமும் விலகி விட்டது. இதனால் முககவசம் அணிபவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. கொரோனாவுக்கு இன்னும் முடிவு கட்டப்படாத நிலையில் எச்-1 என்-1 இன்புளுயன்சா வைரசும் மிரட்டுகிறது. இந்த நோய் கிருமியில் இருந்து தப்பிக்கும் கேடயமாக முககவசம் இருந்தாலும், இதனை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்காமல் அலட்சிய போக்குடன் உள்ளனர். தற்போது முககவசம் அணிபவர்கள், அணியாதவர்கள் மனநிலை என்ன என்பதை பார்ப்போம்.

கொரோனா தொற்று குறைந்தது

புதுக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து:- கொரோனா காலக்கட்டங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என்பதால் முககவசம் அணிந்தேன். பொது வெளியில் செல்லும் போதும், பணியில் இருக்கும் போதும் முக கவசம் அணிவதை பழக்கமாக வைத்திருந்தேன். கொரோனா பரவல் குறைந்த பின் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் முககவசம் அணிவதை தற்போது நிறுத்திவிட்டேன். தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை. நோய் பரவல் தொடர்பாக முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அரசு அறிவித்தால் கட்டாயம் அணிவேன்.

முழுமையாக மீளவில்லை

கறம்பக்குடியை சேர்ந்த மருந்து கடை உரிமையாளர் பிச்சையா:- தலைகவசம் உயிர் கவசம் என்ற போக்குவரத்து விழிப்புணர்வு வாசகத்தை தாண்டி முககவசமே உயிர் கவசம் என்ற நிலைக்கு கொரோனா பெரும் தொற்று நம்மை உருவாக்கிவிட்டது. இந்த தொற்றில் இருந்து நாம் முழுமையாக மீளவில்லை. இந்திய அளவில் தினசரி பாதிப்பு இன்னும் 4 இலக்கத்தில் இருந்து குறையவில்லை. ஆனால் பொதுமக்களிடம் கொரோனா குறித்த பயம் முழுமையாக குறைந்துவிட்டது. இந்த அஜாக்கிரதை உணர்வை நாம் கைவிட வேண்டும். தற்போது 95 சதவீதம் பேர் முககவசம் அணிவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். கொரோனா மட்டுமல்லாது வேறு சில தொற்றுகளில் இருந்து முககவசம் நம்மை காக்கும். குறிப்பாக விழா காலங்களில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு அவசியம்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

அறந்தாங்கி கோட்டையை சேர்ந்த முத்துசாமி:- கொரோனா தொற்று பரவிய நேரத்தில் கிராம புறங்களில் கொரோனா பரவாது என்ற கருத்தால் கிராம மக்கள் பெரும்பாலானோர் முககவசம் அணியவில்லை. கொரோனாவால் ஏராளமானோர் இறந்த பின்னர் தான் முககவசம் அணிய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் உணர்ந்தனர். ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இனிவராது என நினைத்து முககவசம் அணிவதை அனைவரும் தவிர்த்து வருகின்றனர். ஆனால் இது நல்லது இல்லை. தற்போது பண்டிகை என்பதால் எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது. கொரோனா தொற்றை அனைவரும் மறந்து முககவசத்தை மறந்துள்ளனர். இதனால் அரசு மறுபடியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வீரியம் குறையவில்லை

இலுப்பூரை சேர்ந்த டாக்டர் மனோஜ்குமார்:- கொரோனா தொற்று வீரியம் இன்னும் குறையவில்லை. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான சினிமா திரையரங்கம், திருமண நிகழ்ச்சி, கலையரங்கம், வழிபாட்டு தலங்களில் கண்டிப்பாக பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகள், பஸ்நிலையம், ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே அங்கு செல்வோர் தாமாக முன்வந்து முககவசம் அணிந்தால் கொரோனா தொற்றை குறைக்கலாம்.

கொரோனா கட்டுக்குள் வந்ததால்:

பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த மக்களிடையே ஆர்வம் குறைந்தது

கொரோனா நோய் பரவல் நேரத்தில் நோய் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிக்கு ஏங்கி நின்றவர்கள் பலர். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு முதல் தவணை, 2-வது தவணை செலுத்தப்பட்டு கடைசியாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கு மக்களிடம் ஆர்வம் இல்லாமல் போனது. அதற்கு காரணம் கொடூரமாக பரவிய கொரோனா கட்டுக்குள் வந்ததால் தான். இருப்பினும் கொரோனா முற்றிலுமாக நம்மை விட்டு இன்னும் சென்றுவிட வில்லை. இன்னும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் இருக்கிறார்கள். எனவே கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்தாலே கொரோனாவை கட்டுப்படுத்தலாம்.

வீட்டிலேயே முடங்க வைத்த கொரோனா

உலகையே உலுக்கிய ஒற்றை வார்த்தை கொரோனா. அண்டை அயலாருடன் பேசக்கூட முடியாமல் வீட்டிலேயே முடங்க வைத்த நோய். வீதியில் கூட நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முககவசம் அணியாமல் வீதியில் நடமாடினால் அபராத நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. அந்த அளவுக்கு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் செய்தது. ஊரடங்கால் வேலையிழந்து, வாழ்வு இழந்தவர்கள் ஏராளம். மக்கள் வாழ்க்கை முறையே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என்று குறிப்பிடும் வகையில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது. பொருளாதார வளர்ச்சிக்கும் தடைக்கல்லாகி போனது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது எப்படி?

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது அவர்களது வாயில் இருந்து வெளிவரும் நீர் துளிகளால் தான் அதிக அளவில் பரவுகிறது. இதனால் கைகளை 'சோப்' மற்றும் சானிடைசர் என்ற சுத்திகரிப்பு திரவம் கொண்டு தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுமான வரையில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது நல்லது. தும்மும் போதும், இருமல் வரும் போதும் துணி வைத்து வாயை மூடிக்கொண்டால் இந்த நோய் பரவுவதை குறைக்கலாம். சுகாதாரமாக இருப்பதால் இந்த நோய் பாதிப்பு முற்றிலும் தடுக்கப்படும்.

முககவசம் விற்பனை மந்தம்

முககவசம் விற்பனை செய்து வரும் வியாபாரிகள் புதுக்கோட்டையை சேர்ந்த சுல்தான், அன்னவாசலை சேர்ந்த மோகன்குமார் ஆகியோர் கூறுகையில், ''கொரோனா காலக்கட்டங்களில் முககவசம் விற்பனை அதிகமாக இருந்தது. தட்டுப்பாடுகளும் சில நேரங்களில் இருந்தது. இதனால் கரூர், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து முககவசம் வாங்கி வந்து வியாபாரம் செய்தோம். பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பலரும் முககவசம் அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர். நாளடைவில் கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் முககவசம் பலர் அணிவதில்லை. மேலும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வு குறைந்து விட்டது. இதனால் முககவசங்களை பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது முககவசம் விற்பனையும் மந்தமாகி விட்டது'' என்றனர்.

காற்றினால் பரவும் நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்

விராலிமலையை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் அண்ணாமலை:- கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் உத்தரவின்படியும், கொரோனா தொற்றின் வீரியத்தின் தன்மையை உணர்ந்தும் கட்டாயம் முககவசம் அணிந்து வெளியே சென்றனர். இதனால் பெருமளவு கொரோனா தொற்று தவிர்க்கப்பட்டது. தற்போது பொதுமக்களிடையே இந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதாலும், தொற்றின் பரவல் குறைவாக இருப்பதாலும் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் முககவசம் இன்றி வழக்கம் போல் வெளியே சென்று வருகின்றனர். கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்காமல் முககவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே செல்வது வரவேற்கத்தக்கது அல்ல. கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கண்டிப்பாக அனைவரும் முககவசம் அணிந்து இருப்பது அவர்களுக்கு மட்டுமன்றி அருகில் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும். முககவசம் அணிவதால் கொரோனா தொற்று மட்டுமின்றி காற்று மாசுபாட்டினால் உண்டாகும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராமலும், காற்றினால் பரவும் தொற்று நோய்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம் என்றார்.

கேடயமாகும் முககவசம்

புதுக்கோட்டை நகரப்பகுதியை பொறுத்தவரை பொதுமக்கள் சிலர் முககவசம் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதேபோல் மருத்துவ துறையில் பணியாற்றுபவர்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் சிலர் முககவசம் அணிவதை கடைப்பிடிக்கின்றனர். மேலும் ஒரு சில அரசு அலுவலகங்களிலும் முககவசம் அணிந்து ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கிராமப்புறங்களில் பெருமளவு முககவசம் அணிவதை தவிர்த்துவிட்டனர். தற்போது கொரோனா வைரசின் வீரியம் குறைந்து வைரஸ் காய்ச்சல் போல் அவ்வப்போது பரவுகிறது. இதனை தடுக்கவும், நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் முககவசம் ஒரு கேடயமாகும். எனவே முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்