வேளாண் சந்தை திட்டத்தில் பதிவு செய்தால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிக லாபம் பெறலாம்:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
வேளாண் சந்தை திட்டத்தில் பதிவு செய்தால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிக லாபம் பெறலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பதிவு செய்யும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் விளைபொருட்களுக்கு அதிக லாபம் பெறலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேளாண் சந்தை திட்டம்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் நெல்லை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீவைகுண்டம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் e-NAM எனும் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உரிய தரப்பகுப்பாய்வு செய்து சந்தைப்படுத்திட வசதிகள் உள்ளன. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மின்னணு முறையில் தேசிய அளவில் சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் ஏலநடைமுறைகள் இணையதளம் மூலம் மேற்கொள்வதால் சொந்த மாவட்டம், பிறமாவட்டங்கள் மற்றும் பிறமாநிலங்களில் உள்ள வணிகர்கள், இணையவழியில் பங்கேற்கும் வசதி உள்ளதால் போட்டி அடிப்படையிலான லாபகரமான விலையை விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு பெறலாம். விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடையே எவ்வித இடைத்தரகர்களும் இன்றி விற்பனைத்துறை அலுவலர்களின் உதவியுடன் நேரடி வர்த்தகம் நடைபெறுவதால் இடைத்தரகு, கமிஷன் போன்றவை இந்த திட்டத்தில் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. e-NAM திட்டத்தின் கீழ் விளைபொருட்களுக்கான விற்பனைத் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் இணையவழியில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
பண்ணை வாயில் வணிகம்
இதே போன்று "பண்ணைவாயில் வணிகம்" என்கிற நடைமுறையும் அமலில் உள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விளைபொருட்களை எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி மற்றும் போக்குவரத்து செலவினங்களை குறைக்கும் நோக்கில், விவசாயிகளின் இருப்பிடம் மற்றும் தோட்டத்துக்கே விற்பனைக்கூட அலுவலர்கள் நேரில் சென்று e-NAM செயலி மூலம் விற்பனை செய்து தரப்படுகிறது. இந்த பண்ணைவாயில் வணிகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், கடம்பூர், கழுகுமலை, சாத்தான்குளம், புதூர், விளாத்திக்குளம், எட்டையபுரம் ஆகிய அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நிதியாண்டில் ரூ.39 லட்சத்து 20 ஆயிரத்து 53 மதிப்பிலான 2964.669 குவிண்டால் கொள்ளளவு கொண்ட மக்காச்சோளம், கத்திரிக்காய், எலுமிச்சை, வேப்பவிதை, வெங்காயம், வாழைப்பழம், தக்காளி, வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ கம்பு, ஆமணக்கு, கருப்புவெல்லம், தேங்காய், கொப்பரை, மாங்காய், பூக்கள், பருத்தி, பாசிப்பயறு, முருங்கைக்காய் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது வரை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் விளைபொருட்களை போட்டி விலையில் விற்பனை செய்துள்ளனர். 143 வியாபாரிகள் இதுவரை ஒன்றுபட்ட ஒற்றை உரிமம் பெற்றுள்ளனர்.
பதிவு செய்ய..
விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை பெற தங்கள் பகுதிகளில் உள்ள விற்பனைக் கூடங்களுக்கு சென்று தங்களைப் பதிவு செய்து கொண்டும் வியாபாரிகள் உரிய உரிமம் பெற்றும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் e-NAM திட்டத்தின்கீழ் பதிவு செய்ய விவசாயிகள் ஆதார் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.