நிலக்கரி, மீத்தேன் எடுக்க முயற்சித்தால் தொடர் போராட்டம் நடத்துவோம்
நிலக்கரி, மீத்தேன் எடுக்க முயற்சித்தால் தொடர் போராட்டம் நடத்துவோம்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவில் நிலக்கிரி, மீத்தேன் எடுக்க முயற்சித்தால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நிர்வாகிகள் கூட்டம்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அரவிந்தசாமி, பன்னீர்செல்வம், வில்லு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் உலகநாதன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாநில தலைவர் விசுவநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொடர் போராட்டம்
காவிரி, கல்லணை, வெண்ணாறு ஆகியவைகளின் பாசன வாய்க்கால், இதனுடடைய பாசன நீர் வழங்க கூடிய ஏரிகளை பேர்க்கால அடிப்படையில் தூர்வாரவேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம், மீத்தேன், ஷேல்எரிவாயு உள்ளிட்டவற்றை எடுக்க முயற்சித்தால் தொடர் போராட்டம் நடத்துவோம்.
எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தக்கூடாது.
கூடுதல் விலைக்கு விற்பனை
அரியலூர் மாவட்டம் தூத்தூர், தஞ்சை மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையும், பாலமும் கட்ட அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விதை உளுந்துக்கு 50 சதவீத மானியம் என அறிவித்துவிட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் மின் இணைப்புகளை காத்திருப்போருக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராயராம்பட்டி பேய்வாரியில் தடுப்பணை கட்டி 2 ஆண்டுகள் ஆகிறது. எனவே வயல்காட்டிற்கு செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டும். கரையை அகலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.