காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்தாவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்தாவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2023-07-05 18:52 GMT

புதுக்கோட்டையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர் முனை இளைஞர் அணி மற்றும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு சங்கம், மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு நகர்மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விவசாயிகள் நினைவாக உழவர் தின ஊர்வலம் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மாநாட்டில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதன்பின் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முதற்கட்டமாக ரூ.7 ஆயிரம் கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் பட்ஜெட்டில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட டென்டர் பணிகள் தான் இன்றளவும் ஆமை வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை விரைவுபடுத்த அமைச்சர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். முதல்-அமைச்சராக இருந்த காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இத்திட்டத்தை கொண்டு வர எண்ணினார்கள். இதனை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார். இத்திட்டத்தை விரைவுப்படுத்தாவிட்டால் 7 மாவட்ட விவாசாயிகளை திரட்டி விரைவில் போராட்டம் நடத்தப்படும். மருத்துவப்படிப்புக்கான கட்டண உயர்வு தான் இந்த ஆட்சியின் சாதனை'' என்றார். மாநாட்டில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்