7 பஞ்சலோக சிலைகளை எடுத்துச்சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்

சுவாமிமலையில் உள்ள சிற்பக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்த 7 பஞ்சலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எடுத்துச்சென்றனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து ஸ்தபதிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-09 20:18 GMT

கபிஸ்தலம்;

சுவாமிமலையில் உள்ள சிற்பக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்த 7 பஞ்சலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எடுத்துச்சென்றனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து ஸ்தபதிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சர்வ மானிய தெருவில் உள்ள ஸ்தபதி மாசிலாமணி என்பவரது சிற்ப கூடத்தில் பழங்கால பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இந்த தகவலின் பேரில் சென்னையில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் இந்திரா உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் நேற்று ஸ்தபதி மாசிலாமணி என்பவரின் சிற்ப கூடத்துக்கு வந்தனர்.

பழங்கால சிலைகளை எடுத்துச்சென்றனர்

அங்கு வந்த அவர்கள், அந்த சிற்ப கூடத்தில் வைக்கப்பட்டு இருந்த சிலைகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பின்னர் அமர்ந்த நிலையில் இருந்த புத்தர் சிலை, நின்ற நிலையில் இருந்த புத்தர் சிலை, போக சக்தியம்மன் சிலை, சிவதாண்டவம், மீனாட்சி, விஷ்ணு, ரமணர் ஆகிய 7 பழங்கால சிலைகளை தங்களுடன் எடுத்து சென்றனர்.இந்த சிலைகளை சென்னையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்வதாகவும், அங்கு இந்த சிலைகள் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

தர்ணா போராட்டம்

போலீசார், ஸ்தபதி மாசிலாமணியின் சிற்ப கூடத்தில் இருந்த சிலைகளை எடுத்துச்சென்றதை அறிந்து அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சக ஸ்தபதிகள் அங்கு திரண்டு வந்தனர்.பின்னர் அவர்கள், சிலைகளை எடுத்துச்செல்லக் கூடாது என்றும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், சுவாமிமலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன் பிறகே அந்த 7 சிலைகளையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாங்கள் தயார் செய்தோம்

இதுகுறித்து ஸ்தபதி மாசிலாமணியின் மகன் கவுரிசங்கர் நிருபர்களிடம் கூறியதாவதுபோலீசார் எடுத்துச்சென்ற 7 சிலைகளும் நாங்கள்தான் தயார் செய்தோம். நாங்கள் தயார் செய்த 7 சிலைகளை பழங்கால சிலைகள் என‌க்கூறி போலீசார் எடுத்துச்சென்று விட்டனர். நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் ேபாலீசார் கேட்கவில்லை. நாங்கள் பரம்பரை, பரம்பரையாக இந்த தொழில் செய்து வருகிறோம்.அந்த சிலைகள் பழமையான சிலைகளா? என தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து விட்டு திருப்பி தருவதாக கூறினார்கள். நானே இங்கு சோதனை செய்து காண்பிப்பதாக சொன்னேன். ஆனால் போலீசார் மறுத்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்