திருமணமான ஒரு மாதத்தில் ஐ.டி. ஊழியர் திடீர் மாயம்

திருமணமான ஒரு மாதத்தில் ஐ.டி. ஊழியர் திடீர் மாயம்

Update: 2023-08-16 19:00 GMT

சுந்தராபுரம், 

கோவையில் திருமணமான ஒரு மாதத்தில் ஐ.டி. ஊழியர் திடீரென்று மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஐ.டி. ஊழியர்

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கவுசிகாவுக்கும் (28) கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

கவுசிகா கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜாராம் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

திடீர் மாயம்

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவருடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் வேலை செய்யும் நிறுவனம் ஆகியவற்றில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் ராஜாராம் வீட்டுக்கு சென்று விசாரணை செய்தனர்.

கடிதம் சிக்கியது

அப்போது அங்கு ஒரு கடிதம் இருந்தது. அதில், நான் எதற்கும் சரியில்லாதவன். நான் வாழ்க்கையை எதிர்த்து போராட தகுதி இல்லாத ஆள். இதனால் நான் வீட்டை விட்டு போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம். நான் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு நானே காரணம். வேறு யாரும் இல்லை என்று எழுதப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அதை ராஜாராம்தான் எழுதினாரா? அல்லது வேறு யாராவது எழுதி இருக்கிறார்களா என்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அவர் எதற்காக மாயமானார்?, கணவன்-மனைவி இடையே ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் திருமணமான ஒரு மாதத்திலேயே ஐ.டி. ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்