ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் இலக்கை நோக்கி மன உறுதியுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Update: 2022-12-18 23:34 GMT

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுடன், 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நேற்று கலந்துரையாடினார்.இதில், மாநிலம் முழுவதும் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கு பயிற்சி பெறும் என்ஜினீயரிங், மருத்துவம், கலை, அறிவியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கவர்னர் பதில் அளித்தார். கலந்துரையாடலின்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

நான் சிறுவயதில் தந்தையை இழந்தேன். குடும்பத்தை பிரிந்து இருந்த நாட்கள் கடினமாக இருந்தன. சாலை, மின்சார வசதியில்லாத குக்கிராமத்தில் பிறந்து, தினமும் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்தேன். முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் வரை விடுதி அறையில் மின்விசிறி வசதிகூட இருந்ததில்லை.

இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், ஒற்றை இலக்கை நோக்கி திடமான மனஉறுதியுடன் பயணிக்க வேண்டும். அதற்காக நாள் ஒன்றுக்கு 13 முதல் 14 மணி நேரத்தை ஒதுக்க வேண்டும். கவனத்தை திசைதிருப்பும் டி.வி., செல்போன் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது.உடற்பயிற்சி அவசியம். அதுதான் ஆரோக்கியமாக இருக்க உதவும். உடல்நலத்தைப் பேண வேண்டும். நல்ல உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

சாதித்துக்காட்டுங்கள்

உங்களை யாராவது குறை கூறினால், அதில் கவனம் செலுத்தாமல் சாதித்துக்காட்டுங்கள்.பெண்களுக்கு முந்தைய காலங்களில் பணிப் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை. பல்வேறு உயர் பதவிகளில் பெண்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். தமிழ் மொழி, மிக அற்புதமான படைப்புகளை கொண்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை எதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.மாறிவரும் உலகுக்கு ஏற்ப, அனைத்தையும் எதிர்கொள்ள, பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியது அவசியம்.

பட்டங்களுக்காக வேலை கிடைக்கும் நிலை தற்போது இல்லை. செயல்திறன், அறிவுத்திறன், சிந்தனையையும் கருத்தில்கொண்டே நிறுவனங்கள் வேலை கொடுக்கின்றன.

உலகளவில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடான இந்தியா, 2030-க்குள் 3-வது பெரிய நாடாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்