"ஒழுங்கா திருட கூட தெரியலயே"..ஏடிஎம்-க்குள் தேம்பி தேம்பி அழுத திருடன் - திகைத்த போலீசார்...!
முதல் திருட்டு முற்றிலும் கோணலாயிடுச்சுனு சொன்னது மட்டுமல்லாமல், திருட முடியாததை நினைச்சு, ஒரு மணிநேரம் ஏடிஎம் அறையிலேயே அழுதுட்டு இருந்ததாக போலீசாரிடம் திருடன் தெரிவித்தான்.;
நாகை,
நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஏ.டி.எம். மையம் திறந்து கிடப்பதையும், உள்ளே இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் கைரேகை போலீசார் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டதுடன், மோப்ப நாய் கொண்டும் சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு ஏ.டி.எம். மையத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரை வைத்து உடைத்தும், பின்னர் பணம் எடுக்க முடியாமல் கொள்ளை முயற்சியை கைவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகள் தெளிவாக இல்லாததால், மர்மநபரை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைத்தனர். பப்ளிக் ஆபீஸ் சாலை முதல் பெருமாள் கோவில் வரை உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நாகை பெருமாள் வடக்கு வீதியை சேர்ந்த 25 வயதான விஸ்வநாதன் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, நாகை பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த விஸ்வநாதனை, தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஏன் கொள்ளையடிக்கச் சென்றேன் என? விஸ்வாதன் கூறிய பதிலை கேட்டு, போலீசார் கிறுகிறுத்து போயினர். "வேலை இல்லாமல் சுற்றித் திரிந்தேன்", "சரக்கு சாப்பிடணும் போல இருந்தது", பணத்திற்கு என்ன செய்றதுனு யோசிச்சப்போ, 24 மணி நேரம் பணம் கொடுக்கும் மிஷின்தான் இருக்கேன்னு, ஏடிஎம்-ஐ கடப்பாறையால உடைச்சேன்... ஆனா, அது சொதப்பிருச்சு... ஏடிஎம் மிஷின உடைக்கவே முடில... பர்ஸ் டைம் திருட்டுல இறங்கினதுனால என்னவோ,
முதல் திருட்டு முற்றிலும் கோணலாயிடுச்சுனு சொன்னது மட்டுமல்லாமல், திருட முடியாததை நினைச்சு, ஒரு மணிநேரம் ஏடிஎம் அறையிலேயே அழுதுட்டு இருந்ததாக போலீசாரிடம் திருடன் தெரிவித்தான்.
கொள்ளையன் விஸ்வநாதன் சொன்னது, ஒரு பக்கம் கதைய கேட்ட போலீசாருக்கு சிரிப்பு வந்தாலும், மறுபக்கம் கடமையில் உறுதியாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து, விஸ்வநாதனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொகுசு வாழ்க்கைக்கும், மதுபோதைக்கும் ஆசைப்பட்டு, கன்னி திருடர்களாக மாறும் நபர்களால், பொதுமக்களுக்கு மட்டுமல்ல, போலீஸ்காரர்களுக்கும் இம்சையாகத்தான் உள்ளது.