குடிமங்கலம்;
குடிமங்கலம் அருகே ஸ்கூட்டர் மீது வேன் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள். கிடாவிருந்துக்கு உறவினர்களை அழைத்து விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தம்பதி
திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்புதூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி பொன்னுத்தாய் (55). இவர்களது தோட்டத்தில் வருகிற 12-ந் தேதி கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக உறவினர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இந்த நிலையில் நேற்று ஆத்துக்கிணத்துப்பட்டியில் உள்ள உறவினரை அழைக்க தம்பதி இருவரும் ஸ்கூட்டரில் அங்கு சென்றனர். பின்னர் உறவினரை சந்தித்து அழைப்பு விடுத்து விட்டு ஸ்கூட்டரில் லிங்கமநாயக்கன்புதூர் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
ஸ்கூட்டரை கந்தசாமி ஓட்டினார். பின் இருக்கையில் அவருடைய மனைவி பொன்னுத்தாய் அமர்ந்து இருந்தார். இவர்களுடைய ஸ்கூட்டர் சுங்காரமடக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஸ்கூட்டருக்கு பின்னால் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சரக்கு வேன் ஒன்று வந்தது. இந்த வேனை ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவர் ஓட்டினார்.
பலி
அப்போது எதிர்பாராத விதமாக கருணாகரன் ஓட்டி வந்த சரக்கு வேன், கந்தசாமியின் ஸ்கூட்டர் மீது மோதியதோடு நிற்காமல் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் தம்பதியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர். அங்கு தம்பதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் 2 பேரும் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் குடிமங்கலம் போலீசார் விரைந்து வந்து தம்பதி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வேனை ஓட்டி வந்த கருணாகரனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிடா விருந்துக்கு உறவினர்களை அழைத்து விட்டு வந்தபோது வேன் மோதி தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.