காதல் மனைவி மர்ம சாவு வழக்கில் கணவர் கைது

காதல் மனைவி மர்ம சாவு வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-08-17 18:47 GMT

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பனையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் செந்தில். விவசாயி. இவருடைய மகள் பிரியா (வயது 23). இவர், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தபோது அவருக்கும், அதே கல்லூரியில் படித்த திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் கீழத் தெருவை சேர்ந்த மதன்ராஜ் (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சமாதானமாகி இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர்களிடைய சமீப நாட்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பிரியா மற்றும் மதன்ராஜ் இருவரும் திருப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் பிரியாவின் சகோதரி குழந்தை பிறந்த நாளுக்காக நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து இருவரும் இங்கு வந்தனர். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் பிரியா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசில் பிரியாவின் தாய் சுமதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பிரியாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டரும் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இந்த வழக்கில் மதன்ராஜை திருத்துறைப்பூண்டி போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்