2 ஆண்டுகளுக்கு பிறகு கணவர் கைது

கூடலூர் அருகே குடும்ப பிரச்சினையால் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-04 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் அருகே குடும்ப பிரச்சினையால் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கணவரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் தற்கொலை

கூடலூர் 2-ம் மைல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகள் பர்ஷானாவுக்கும் (வயது 20), கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த அப்துல் சமதுவுக்கும் (33) கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

இதனால் பர்ஷானா மனம் உடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் கடந்த 18.6.2020-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பர்ஷானா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே, மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என பர்ஷானாவின் தந்தை அப்துல்லா கூடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கணவர் கைது

இதைத் தொடர்ந்து தற்கொலை வழக்கில் மறு விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கணவன் அடித்து துன்புறுத்தி வந்ததால், பர்ஷானா தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து வயநாட்டில் பதுங்கி இருந்த அப்துல் சமதுவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்