தீக்குளித்த கணவன்-மனைவி சாவு

பண்ருட்டி அருகே தீக்குளித்த கணவன்-மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் அவர்களது 3 குழந்தைகள் ஆதரவின்றி பரிதவித்து வருகின்றனர்.

Update: 2023-04-23 18:45 GMT

பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தோப்புக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் அருள் (வயது 35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(32). இவர்களுக்கு ஹரிணி(8), ஹேமலதா(6) என்ற 2 மகள்களும், குமுதன்(5) என்ற மகனும் உள்ளனர்.

அருள் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அதன்படி சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த முத்துலட்சுமி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருள், முத்துலட்சுமியிடம் இருந்த கேனை பிடுங்கி தன் மீதும் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டார். அந்த சமயத்தில் முத்துலட்சுமி தீக்குச்சியை கொளுத்தியதால், இருவர் மீதும் தீப்பற்றி எரிந்தது. இதில் தீக்காயமடைந்த 2 பேரும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதரவின்றி குழந்தைகள் பரிதவிப்பு

கணவன்-மனைவி இருவரும் இறந்ததால், அவர்களது 3 குழந்தைகளும் தற்போது ஆதரவின்றி பரிதவித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு ஆதரவாக அருளின் தாய் தமிழேந்தி மட்டுமே தற்போது உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருவதால், அவரால் குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 3 குழந்தைகளின் நலன் கருதி அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

Tags:    

மேலும் செய்திகள்