பஸ் மோதி கணவன்-மனைவி பலி
ஆற்காடு அருகே திருமண நாளில் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பஸ் மோதி கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
ஆற்காடு
ஆற்காடு அருகே திருமண நாளில் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பஸ் மோதி கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
பஸ் மோதியது
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 34), ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி சங்கீதா (29). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு கிஷோர் (3½), தஸ்வந்த் (1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கிஷோர் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.
இவர்களுக்கு இன்று திருமண நாள் ஆகும்.
இதையொட்டி காலை கிஷோரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஈஸ்வரன், சங்கீதா, தஸ்வந்த் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு அருகே உள்ள புதுபாடி பச்சையம்மன் கோவிலுக்கு வந்தனர்.
கடப்பந்தாங்கல் அருகே வரும்போது ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கணவன்-மனைவி பலி
இந்த விபத்தில் ஈஸ்வரன், சங்கீதா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
காயம் அடைந்த தஸ்வந்த் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தனியார் பஸ் டிரைவரின் கவனக்குறைவு மற்றும் அதிவேகமாக வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறி இதற்கு ஒரு முடிவு தெரியாமல் பிணத்தை இங்கிருந்து அகற்றக்கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர்.
அதன் பின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த திடீர் சாலை மறியலினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருமண நாளில் கணவன்-மனைவி விபத்தில் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.