ரவுடி மீதான துப்பாக்கிச்சூடு குறித்து மனிதஉரிமை கமிஷன் விசாரணை

கோவையில் ரவுடி மீதான துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-16 18:45 GMT

கோவை

கோவையில் ரவுடி மீதான துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

வாலிபர் படுகொலை

கோவையில் கடந்த மாதம் 12-ந் தேதி மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த சத்தியபாண்டி (வயது 27) என்பவர் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 4 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட ரவுடி சஞ்சய் ராஜா, சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவரை கோவை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, சத்தியபாண்டியை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்து இருப்பதாக சஞ்சய் ராஜா தெரிவித்தார்.

ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

இதையடுத்து அவரை கடந்த 7-ந்தேதி காலை கரட்டுமேடு பகுதிக்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சஞ்சய்ராஜா போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றார்.

தொடர்ந்து போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கியால் சுட்டனர். இதில் சஞ்சய் ராஜாவின் காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் காயம் அடைந்த சஞ்சய் ராஜாவை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மனித உரிமை கமிஷன் விசாரணை

இந்த நிலையில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட சஞ்சய் ராஜா, துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தை தமிழக மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து விசாரிக்க தொடங்கியது. சஞ்சய் ராஜா சுடப்பட்டது எப்படி என்பது குறித்து ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் கோவை கோர்ட்டு அருகே கடந்த மாதம் 13-ந்தேதி கோகுல் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கவுதம், ஜோஸ்வா ஆகியோர் மேட்டுப்பாளையம் அருகே போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றனர். அவர்களை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சிலர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்