படவல் கால்வாயில் மனுநீதிநாள் முகாம்: ரூ.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்
படவல்கால்வாயில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 98 பேருக்கு ரூ.64லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
படவல்கால்வாயில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 98 பேருக்கு ரூ.64லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் படவல்கால்வாய் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியம், பட்டா மாறுதல், புதிய குடும்ப மின்னணு அட்டை வழங்குதல், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகள் மூலம் 98 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஒன்றிய குழு தலைவர் விஜயநிர்மலா சரவணபவா, துணைத்தலைவர் குமரவேல் மாவட்ட கவுன்சிலர்கள் மோகனசுந்தரம், சதாசிவம், படவல் கால்வாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆராயி, பூனாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நோக்கம்
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இம்மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது. குறிப்பாக மகளிர் திட்டம் மூலம் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவது குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் வந்து தங்கள் துறைகள் சார்ந்த குறைகளை பொதுமக்கள் நிவர்த்தி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கூறினார்கள். இதனை பொதுமக்கள் அந்தந்த காலகட்டத்தில் செய்து கொள்ள வேண்டும்.
நீங்களே மாவட்ட கலெக்டர்
உதாரணமாக ஒரு சாதி சான்று குழந்தைகளுக்கு எடுப்பதாக இருந்தால் கடைசி நேரத்தில்தான் நாம் அதிகாரிகளை அணுகுகிறோம். அதனைத் தவிர்த்து பட்டா மாறுதலாக இருந்தாலும் சரி, வாரிசு சான்றிதழாக இருந்தாலும் சரி அந்தந்த கால தேவைகளை உடனுக்குடனே அதிகாரிகளை அணுகி நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
அப்படி செய்யும் பட்சத்தில் நீங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் போது நீங்களே மாவட்ட கலெக்டர் ஆகிறீர்கள்.
இவ்வாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.
கலந்துரையாடல்
முன்னதாக காட்டூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளை கலெக்டர் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி புத்தகங்களை வழங்கினார். பின்னர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் வரவேற்று பேசினார். முடிவில் பவானி தாசில்தார் தியாகராஜன் நன்றி கூறினார்.