இந்தியாவை காக்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்ற கருத்து எப்படி தவறாகும்? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

இந்தியாவை காக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்ற கருத்து எப்படி தவறாக இருக்க முடியும்? என்று அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-08-12 00:04 GMT

சென்னை,

எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் காரணமாகத்தான் நாட்டின் பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவர முடிந்திருக்கிறது என்பதில் இருந்தே இந்தியாவில் ஜனநாயகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். மணிப்பூர் மாநிலத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிக்கொண்டிருக்கிறது. இதுபற்றியெல்லாம் நாடாளுமன்றத்தில் மத்திய ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் உறுப்பினர்களும், மந்திரிகளும் பதிலளித்து பேசி, தீர்வு காண்பார்கள் என மக்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில், ஆளுந்தரப்பைச் சேர்ந்த அத்தனை பேரும் தி.மு.க.வையும், தமிழ்நாட்டையும் குறிவைத்துப் பேசி, மணிப்பூரில் தங்கள் ஆட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

தவறான தகவல்கள்

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்குப் பொறுப்பு வகிப்பவர்கள் போலவே மத்திய மந்திரிகள் பேசுவது ஆச்சரியமளித்த நிலையில், நாட்டை ஆளக்கூடிய உயர்ந்த பொறுப்பில் 9 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் பிரதமரும் அதே வழியில் அவதூறான முறையில் நாடாளுமன்றத்தில் பேசியது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது.

எந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது, யார் எப்படி செயல்படுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய உளவு அமைப்புகளை மத்திய அரசு கொண்டுள்ள நிலையில், நாட்டின் பிரதமரிடம் எப்படிப்பட்ட தவறான தகவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன, அதை அவர் உறுதிப்படுத்தாமல் எப்படி பேசுகிறார் என்பதற்கு, இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று பேசியதாக மந்திரிகள் முதல் பிரதமர் வரை பேசியிருப்பது காட்டியுள்ளது.

பேசியது என்ன?

அண்மையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பிலான நிகழ்வில் நான் கலந்து கொண்டு பேசும்போது, "ஒரு காலத்தில் இந்தியா என்ற வார்த்தையில்கூட நமக்கு பெரிய தாக்கம் இருந்தது கிடையாதே. நான் சொல்வது ஒரு காலத்தில். இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கிற ஊரு. நம்ம ஊரு தமிழ்நாடுதான். முடிந்தால் இதைத் திராவிட நாடாக்க முடியுமா என்று யோசிப்போம்" என்று முன்பிருந்த பழைய நிலைமையினைச் சுட்டிக்காட்டினேன்.

"ஏதோ தூரத்தில் இருக்கிற ஊர் இந்தியா என்ற நிலைமையை மாற்றி, இன்று இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய நிலைமை தமிழ்நாட்டு முதல்-அமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழனுக்கு அந்தப் பொறுப்பு இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. திராவிடர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட அனைவருக்கும் இருக்கிறது" என்று எடுத்துரைத்தேன்.

எப்படி தவறாகும்?

இந்தியாவை காக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்பது எப்படி தவறான கருத்தாக இருக்க முடியும்? ஒரு வேளை அந்தப் பொறுப்பை நிறைவேற்றாத மத்திய பா.ஜ.க. அரசு, நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களும் அதை செய்யக்கூடாது என நினைக்கிறதா?. நான் பேசியதை முழுமையாக அறியாதவர்கள் அதனைக் காதில் வாங்காமல், கவனம் செலுத்தாமல் அரசியல் விளம்பரத்திற்காக எதையோ செய்துவிட்டுப் போகட்டும். பிரதமர் கூடவா முழுமையாக எதையும் தெரிந்துகொள்ளாமல் இத்தனை காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது பரிதாபமும், வேதனையும் படுகிறேன்.

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்

தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. ஒரு மாநிலக் கட்சியாக இருந்தாலும், அதுதான் இந்தியாவில் உள்ள மாநிலங்களை எல்லாம் இணைக்கின்ற, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற கட்சி என்ற பயம்தான் பிரதமரையும், மந்திரிகளையும் இப்படி பதற்றத்துடன் பேச வைத்திருக்கிறது. நாங்கள் கருணாநிதியின் வார்ப்புகள். அவதூறுகள், மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம். உண்மையை உரக்கச் சொல்வோம். தி.மு.க. தலைவர் ஆணைக்கேற்பச் செயல்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்