வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?
கிணத்துக்கடவு, வால்பாறையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு, வால்பாறையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.
பேரிடர் மேலாண்மை தினம்
கிணத்துக்கடவு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் சர்வதேச பேரிடர் மேலாண்மை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா தொடங்கி வைத்தார். பேரணி கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து கிணத்துக்கடவு பஸ் நிறுத்தம், கோவை-பொள்ளாச்சி சாலை வழியாக மீண்டும் கிணத்துக்கடவு பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் அக்சாய கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.
தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள், மழை காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி ப.தங்கராஜ், துணை தாசில்தார்கள் முத்து, ராமராஜ் ,சிவக்குமார், கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் லலிதா கல்லூரி மாணவ-மாணவிகள், வருவாய்த்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வால்பாறை
இதேபோல வால்பாறை வருவாய்த்துறை சார்பிலும் தேசிய பேரிடர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வால்பாறை தனி தாசில்தார் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம், கிராம நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம் வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து வால்பாறை தீயணைப்பு நிலைய சிறப்பு அதிகாரி பிரகாஷ் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் வீழுந்தவர்களை காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும், தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் பாதுகாப்பாக எப்படி பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், வேல்முருகன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.