மழைக்காலங்களில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது எப்படி?

மழைக்காலங்களில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது எப்படி? என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-08-07 19:06 GMT

அரியலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் விவரம் வருமாறு:-

தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும். மா, கொய்யா, முந்திரி மற்றும் இதர பழப்பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி கவாத்து செய்வதின் மூலம் மரத்தின் சுமையை குறைத்து மழை, புயல் காற்றில் இருந்து பாதுகாக்கலாம். காய்கறி பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும். இலைவழி உரமளித்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்தல் வேண்டும். குச்சி பந்தல் அமைத்து கொடிவகை காய்கறி பயிர் செய்வோர் மண் அணைத்தும், வலுவிழந்த பகுதிகளில் கூடுதல் ஊன்று கோல்கள் அமைத்தும் பந்தல் சாய்வதை தடுக்க வேண்டும். அதிகளவில் பயிரிடப்படும் வாழை பயிர்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புகளை பயன்படுத்தி ஊன்றுகோல் அமைக்க வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும். கிழிந்து போன நிழல்வலைகளை தைத்து சரிசெய்யவும். நிழல்வலைக்குடிலில் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும். தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை மற்றும் கத்தரி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். அதிக மழை இருக்கும் பட்சத்தில் நீர் பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் போன்றவை பின்பற்றி பயிர்களை மழை சேதத்திலிருந்து பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்