மத்திய அரசு பட்ஜெட் எப்படி?பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் கருத்து

மத்திய அரசு பட்ஜெட் எப்படி? உள்ளது குறித்து பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-02-01 21:03 GMT

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் எப்படி? என்பது குறித்து பொருளாதார நிபுணர்களும், பொதுமக்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்:-

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும், கொள்கை முடிவாகவும் மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்தது. அதை வலியுறுத்தியும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரியும் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நீண்ட போராட்டத்தை முன்னெடுத்ததை நாடே மறந்திருக்க முடியாது. இந்தநிலையில் தற்போதைய மத்திய அரசின் பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், வேளாண் சட்டங்கள் ரத்து போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

பாரம்பரிய விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் மரபணு மாற்றப்பட்ட விதை பயிர்களை அனுமதிக்கிறார்கள். விவசாயிகளுக்கு கடன் கொடுப்போம் என்கிறார்கள். முதலில் வங்கிகளில் ஏற்கனவே வாங்கிய கடனை கட்ட முடியாமல், கருப்பு பட்டியலில் இருக்கும் விவசாயிகளுக்கு கடன்பெறும் தகுதியை மத்திய அரசு பெற்றுக்கொடுக்கட்டும். இப்படி பல முரண்பாடுகள் கொண்டதாகவே மத்திய அரசின் பட்ஜெட் இருக்கிறது. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் திட்டங்களும், சலுகைகளும் முழுக்க முழுக்க கார்ப்பரேட்களுக்காகவே போடப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாகவே அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

வருமான வரி சலுகை

சேலம் ராஜாராம் நகரை சேர்ந்த ஆடிட்டர் ராமநாதன்:-

தனிநபர் வருமான வரி சலுகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி இருப்பது நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது. இதேபோல் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான நடைமுறை படிவங்கள் 5-ஆக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். விவசாய தொழிலை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருப்பது வரவேற்புக்குரியது. மூத்த குடிமக்களின் அதிகபட்ச சேமிப்பு வரம்பு ரூ.15 லட்சத்து இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்திருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய பட்ஜெட்டை பொருத்தவரை வரவேற்க கூடியதாக தான் இருக்கிறது.

ஆண்டிப்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை பிரியங்கா:-

சிறுவர்கள், இளம் பருவத்தினருக்காக டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். பஞ்சாயத்து மற்றும் வார்டு அளவில் நேரடி நூலகங்கள் அமைக்க மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும். பழங்குடியினருக்காக 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசியிடம் இருந்தது வராது ஏமாற்றம் அளிக்கிறது.

இருவழிபாதை....

தென்னக ரெயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் வைத்திலிங்கம்:-

மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.2 லட்சத்து 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 80 ஆயிரத்து 900 ஆயிரம் கோடி அதிகமாகும். எனவே இது வரவேற்கத்தக்கது. சேலம்- விருத்தாசலம் ரெயில்வே பாதை இருவழி பாதையாக மாற்றப்படும் அறிவிப்பு வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்தோம். இந்த அறிவிப்பு இந்த முறையும் வராதது ஏமாற்றம் அளிக்கிறது. பல ஊர்களுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதியவர்கள், மாற்றுத்திறத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்கினால் நன்றாக இருக்கும்.

மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி உண்ணாமலை:-

தங்கம் விலை ஏற்கனவே உயர்ந்து கொண்டு தான் செல்கின்றன. இந்த நிலையில் தங்கத்தின் மீது கூடுதல் வரி விதிப்பால் அவற்றின் விலை மேலும் அதிகரிக்கும். இதனால் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தங்கம் வாங்குவது எட்டாக்கனியாகி விடும். பெண்களுக்கு 7.5 சதவீத வட்டியில் சிற்பபு சேமிப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு பெண்கள் மத்தியில் சேமிப்பு அதிகரிக்க வழிவகுக்கும். கொரோனாவல் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான சலுகை மிண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். அதுகுறித்த அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றமே.

பெட்ரோல், டீசல் விலை

அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் ராகுல்:-

கடந்த 2014-ம் ஆண்டு முதல் நிறுவப்பட்டுள்ள 157 மருத்துவ கல்லூரிகள் பகுதி அருகே புதிதாக செவிலியர்கள் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பயனுள்ளதாக அமையும். பொறியியல் நிறுவனங்களில் 5 ஜி சேவைகளை பயன்படுத்தி பயன்பாடுகளை உருவாக்க 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும், விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்திருப்ப்பது பாராட்டுக்குரியது. இந்த பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பது தொடர்பான அறிவிப்பு வரவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்