காட்டு யானை இறந்தது எப்படி?

அருமனை அருகே ரப்பர் தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானையின் சாவுக்கான காரணம் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Update: 2022-12-18 18:45 GMT

அருமனை:

அருமனை அருகே ரப்பர் தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானையின் சாவுக்கான காரணம் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இறந்து கிடந்த யானை

அருமனை அருகே உள்ள பத்துகாணி, கற்றுவா ஆகிய மலையோரம் கிராமங்களை அடுத்து வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதிக்கு மிக அருகில் தனியார் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. சம்பவத்தன்று வனப்பகுதியில் இருந்து காட்டு யானைக் கூட்டங்கள் ரப்பர் தோட்டங்களில் புகுந்தன. அவற்றில் ஒரு யானை ரப்பர் தோட்டத்தில் இறந்து கிடந்தது.

நேற்று முன்தினம் காலையில் பால்வெட்ட சென்ற தொழிலாளி யானை இறந்து கிடப்பதையும், அதன் அருகில் சில யானைகள் நிற்பதையும் கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

களியல் வனச்சரக அலுவலர் முகைதீன், வனவர் கணேஷ் மகாராஜன், உதவி வன பாதுகாவலர் சிவகுமார் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது சுமார் 40 வயதை கடந்த ஆண் யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது.

பிரேத பரிசோதனை

தொடர்ந்து யானையின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இந்தப்பகுதியில் மின்வேலிகள் இல்லாததால் மின்சாரம் தாக்கி இறப்பதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியானது.

தொடர்ந்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் இருந்து கால்நடை டாக்டர் டானி பிரீதா தலைமையில் கால்நடை சிறப்பு மருத்துவ பிரிவினர் வந்து வனப்பகுதியில் வைத்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

நோய்வாய்ப்பட்டு இறந்தது

அப்போது யானையின் உடலில் எந்தவிதமான காயங்களும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அதே நேரத்தில் யானை வயது முதிர்ந்த நிலையில் நோய்வாய்ப்பட்டு வனப்பகுதியில் அவதி அடைந்து வந்துள்ளது.

யானை உட்கொண்ட உணவுகள் ஜீரணமாகாமல் அவை உடலிலேயே தங்கி அஜீரண கோளாறால் அவதிப்பட்டுள்ளது. குறிப்பாக பாக்கு மட்டை மற்றும் இதர பொருட்கள் ஜீரணமாகாமல் யானையின் வயிற்றில் இருந்தன. இதனால் அஜீரண கோளாறால் யானை இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் யானையின் உடல் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை வந்த பின்னரே முழுமையான காரணங்கள் தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்