ஜமாபந்தியில் 30 பேருக்கு வீட்டுமனை பட்டா
ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 30 பேருக்கு வீட்டுமனை பட்டாவை கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. அதன்படி ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. இதில் கலெக்டர் பூங்கொடி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் 30 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.
அதன்பின்னர் ஒட்டன்சத்திரம் தாலுகாவின் தேவத்தூர், பொருளூர், மஞ்சநாயக்கன்பட்டி, கொத்தையம், போடுவார்பட்டி, புதுார், பொட்டிகாம்பட்டி, சிக்கமநாயக்கண்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான பதிவேடுகளை ஆய்வு செய்தார். இதில் நிலஅளவை உதவி இயக்குனர் சிவக்குமார், தாசில்தார் முத்துச்சாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.