கடையநல்லூரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடையநல்லூரில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Update: 2022-11-16 18:45 GMT

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடையநல்லூரில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தொடர் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தொடர் மழை பெய்கிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நேற்று முன்தினம் 88.75 அடி நீர்மட்டம் இருந்தது. இது நேற்று 89.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,658 கனஅடி வீதம் நீர் வருகிறது. 768 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கியுள்ளது. நேற்று முன்தினம் 93.44 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 99.08 அடியாக உயர்ந்துள்ளது.

மணிமுத்தாறு அணையில் நேற்று முன்தினம் 76.30 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 77.10 அடியாக உயர்ந்துள்ளது. கடனா அணையில் நேற்று முன்தினம் 70 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 73.50 அடியாக உயர்ந்துள்ளது. ராமநதி அணையில் நேற்று முன்தினம் 71 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 72.50 அடியாக உயர்ந்துள்ளது.

களக்காடு தலையணை

இதேபோல் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் களக்காடு தலையணையில் கடந்த 5-ந் தேதி முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்தோடியது. இதன் காரணமாக தலையணையில் குளிக்க கடந்த 5-ந் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்தநிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து 6 நாட்களுக்கு பின் கடந்த 11-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக தலையணையில் நேற்று காலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்படுவதாக வனச்சரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

கடையநல்லூர் கருப்பாநதி அணை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 51 அடியில் இருந்து 53 அடியாக உயர்ந்தது.

கடையநல்லூருக்கு மேற்கே மலை அடிவாரத்தில் அதிக அளவு மழை பெய்ததால் சீவலான் கால்வாய் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைவெள்ளம் பாய்ந்து கரையோரம் உள்ள மதீனா நகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. வீடுகளில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாத அளவிற்கு இடுப்பு அளவு தண்ணீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.

தண்ணீரில் இறங்கி போராட்டம்

மழையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதாகவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் யாசர்கான் தலைமையில் மக்கள் தண்ணீரில் இறங்கி நேற்று காலை போராட்டம் நடத்தினர். மழைவெள்ளம் பாதித்த பகுதிகளை கடையநல்லூர் தாசில்தார் சண்முகம் பார்வையிட்டார். அப்போது வெள்ளநீரை வெளியேற்ற உரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கடையநல்லூர் 19-வது வார்டு பேட்டை மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. தகவல் அறிந்ததும் 19-வது வார்டு கவுன்சிலர் அக்பர் அலி, கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் லதா, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் அங்கு வந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து நீரை வெளியேற்றும் பணியினை நகராட்சி பணியாளர்கள் துரிதப்படுத்தினர்.

குற்றாலத்தில் குளிக்க அனுமதி

குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையிலும் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டியதால் குளிக்க தடை நீடித்தது.

நேற்று மதியம் 2-30 மணி அளவில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். தற்போது குறைவான சுற்றுலா பயணிகளே குற்றாலத்திற்கு வருவதால் வந்த ஒரு சிலர் மட்டும் அருவிகளில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.

மழை அளவு

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஆய்குடி-88, சிவகிரி-66, கருப்பாநதி-60.5, தென்காசி-55, கடனாநதி-40, ஊத்து- 36, செங்கோட்டை-32.6, பாபநாசம்-30, மாஞ்சோலை-29, அடவிநயினார்- 27, சேர்வலாறு அணைப்பகுதி-24, நாலுமுக்கு மற்றும் சங்கரன்கோவில்- 22, காக்காச்சி- 17, மணிமுத்தாறு- 5.40, களக்காடு மற்றும் நெல்லை-4.60,

Tags:    

மேலும் செய்திகள்