வீடு புகுந்து 32½ பவுன் நகை திருட்டு
திருச்சி கோரிமேடு பகுதியில் வீடு புகுந்து 32½ பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி கோரிமேடு பகுதியில் வீடு புகுந்து 32½ பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை-பணம் திருட்டு
திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலை கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 60). இவரது கணவர் சந்திரசேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று தனலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்து விட்டு பொன் நகரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். இதைநோட்டமிட்ட மர்ம ஆசாமி சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று, பீரோவை திறந்து அதில் இருந்த 32½ பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை திருடிக்கொண்டு வீட்டு சாவியை தனலட்சுமி வைத்து இருந்த இடத்திலேயே வைத்து விட்டு சென்றுவிட்டான்.
வலைவீச்சு
இந்த நிலையில் தனலட்சுமி வீடு திரும்பியபோது, பீரோவில் உள்ள பொருட்கள் கலைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அங்கு இருந்த நகை-பணம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து தனலட்சுமி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.