ஓட்டலில் ரகளை உரிமையாளர் மண்டை உடைப்பு

தஞ்சையில் சிக்கன்ரைஸ் கேட்டு ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டதுடன் உரிமையாளர் மண்டையையும் உடைத்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-11 20:29 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் சிக்கன்ரைஸ் கேட்டு ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டதுடன் உரிமையாளர் மண்டையையும் உடைத்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீன்சிக்கன் கார்னர்

தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 47). இவர் கரந்தையில் தீன் சிக்கன் கார்னர் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய கடையில் நேற்று இரவு 7 மணிக்கு ஒருவர் வந்து சிக்கன்ரைஸ் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த மாஸ்டர், உங்களுக்கு முன்னால் கேட்டவருக்கு கொடுத்து விட்டு தருகிறேன் என கூறி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே சிராஜூதீன் அவரை சமாதானம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஓட்டலில் ரகளை

அதன் பின்னர் அந்த வாலிபர் தனது நண்பர்கள் 2 பேரை அழைத்து வந்து கடையில் இருந்த பொருட்களை சூறையாடி உள்ளார். அங்கிருந்த அடுப்பு மற்றும் எண்ணெய், முட்டை, சாதம், புரோட்டா ஆகியவற்றை கொட்டியதுடன் அவற்றை சாலையில் போட்டுஉடைத்துள்ளனர்.பின்னர் அந்த நபர்கள் அருகில் இருந்த சிராஜூதீனுக்கு சொந்தமான மற்றொரு கடைக்கும் சென்று அங்கிருந்த உணவு பொருட்களையும் கொட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். கடையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட உரிமையாளர் சிராஜூதீன் மண்டையை உடைத்துள்ளனர். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

மேலும் காயம் அடைந்த சிராஜூதீன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, முருகேசன், வாசுதேவன், கந்தமுருகன் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

3 பேரிடம் விசாரணை

இது குறித்துதகவல் அறிந்ததும் தஞ்சை நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை குளத்து மேட்டுதெருவை சேர்ந்த சரண்ராஜ் (வயது 22), கீரைக்கார தெருவை சேர்ந்த விக்கி (23), பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்த கிறிஸ்தவராஜ் (27) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்