ரெயிலில் மதுபானம் கடத்திய ஓட்டல் உரிமையாளர் கைது
திண்டுக்கல்லில் ரெயிலில் மதுபானம் கடத்திய ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வழியாக ரெயில்களில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால், தலைமையில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரெயிலில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அந்த ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் மணிகண்டன் (வயது 49) என்பதும், பெங்களூருவில் இருந்து 13 மதுபான பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.