வாட்டி வதைக்கும் வெயில்: மேய்ச்சல் நிலத்தில் புல்வெளி காய்ந்து போனதால் கால்நடைகள் தவிப்பு
கூத்தாநல்லூர் பகுதியில் வாட்டி வதைக்கும் வெயிலால் மேய்ச்சல் நிலத்தில் புல்வெளி காய்ந்து போயுள்ளன. இதனால் கால்நடைகள் தவித்து வருவதால், கிராம மக்கள் வேதனையில் உள்ளனர்.
கூத்தாநல்லூர் பகுதியில் வாட்டி வதைக்கும் வெயிலால் மேய்ச்சல் நிலத்தில் புல்வெளி காய்ந்து போயுள்ளன. இதனால் கால்நடைகள் தவித்து வருவதால், கிராம மக்கள் வேதனையில் உள்ளனர்.
வாட்டி வதைக்கும் வெயில்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் வகையில் வீடுகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகள் அருகில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு சென்று அங்குள்ள புற்களை உணவாக உண்டு வருகின்றன.
இந்த நிலையில் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
காய்ந்த புற்கள்
அவ்வப்போது லேசான மழை பெய்தாலும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நண்பகல் நேரங்களில் அனலாக கொதிக்கும் வெயிலால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் காய்ந்து, கருகி விட்டன. இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் இரை கிடைக்காமல் சிரமப்படுகின்றன.
ஆடுகள் மற்றும் மாடுகள் வெயிலில் நிற்க முடியாமல் நாள் முழுவதும் மரத்தடி நிழலிலேயே படுத்து விடுகின்றன. கடுமையான வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஆடு, மாடுகள் குடிநீர் குழாய்களை தேடி சென்று தண்ணீர் குடிப்பதையும் பார்க்க முடிகிறது. வழக்கத்துக்கு மாறாக சுட்டெரிக்கும் வெயிலால் ஆடு, மாடுகள் பலவீனம் அடைந்து வருவதாக கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் மிகவும் வேதனையுடன் கூறுகிறார்கள்.