தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்

தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அவர்கள் மலர் கண்காட்சிக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-04-18 18:45 GMT

ஊட்டி,

தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அவர்கள் மலர் கண்காட்சிக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். தினக்கூலி பணியாளர்களுக்கு தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி தொடர் போராட்டம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அங்கம்மாள் என்ற பெண் தொழிலாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதைத்தொடர்ந்து தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.

பராமரிப்பு பணிகள்

தற்காலிக பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.425-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதன் பேரில் தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு நேற்று முதல் பணிக்கு திரும்பினர். கோடை சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் பாத்திகள், நடைபாதை ஓரங்கள், மரங்களை சுற்றிலும் என 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

அந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, உரமிடுவது போன்ற பராமரிப்பு பணிகளை தொழிலாளர்கள் மேற்கொண்டனர். பெரிய புல்வெளி மைதானம், பூங்கா நுழைவுவாயில் முன்பு நன்றாக வளர்ந்த புற்களை அழகாக வெட்டினர். அலங்கார செடிகளும் வெட்டி அழகுப்படுத்தப்பட்டது. குட்டைகளை சுற்றி மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. இதன் மூலம் அடுத்த மாதம் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதே சமயத்தில் 10 நாட்களுக்குள் ஊதிய உயர்வு குறித்த ஆணை வெளியிடாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்