போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகள்
திருவாரூரில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா? என்று வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருவாரூரில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா? என்று வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்
திருவாரூர் பகுதியில் அதிகமாக குதிரைகள் வளர்க்கப்படுகிறது. இந்த குதிரைகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி நகர்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. இந்த குதிரைகள் அடிக்கடி கணைத்து கொண்டு வேகமாக ஓடுவதாலும் பெண்கள் மற்றும் பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
குட்டிகளுடன் சுற்றித்திரியும் குதிரைகள் இரவு நேரங்களிலும் சாலைகளில் படுத்துக்கொள்கின்றன. இவ்வாறு சாலையில் படுத்துக்கிடக்கும் குதிரைகளால், அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
கோவில் வளாகத்திலும்...
பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குதிரை உள்ளிட்ட கால்நடைகளை சாலையில் சுற்றித்திரியவிட்டால், அந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபாராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
ஆனாலும் எச்சரிக்கை பற்றி கவலைப்படாமல் குதிரை உள்ளிட்ட கால்நடைகளை வளர்பவர்கள் சாலைகளில் திரிய விட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்திலும் குதிரைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.
அபராதம் விதிக்க வேண்டும்
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்துசெல்ல வேண்டும்.
மேலும் அவ்வாறு சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகள் ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.