பட்டப்பகலில் பயங்கரம்: கோர்ட்டில் பெண் மீது திராவகம் வீச்சு -கணவர் வெறிச்செயல்
குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற பெண் மீது பட்டப்பகலில் கோர்ட்டில் வைத்து அவரது கணவர் திராவகத்தை வீசினார்.;
கோவை,
கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42). லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (35). இவர்களுக்கு 15 மற்றும் 11 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து வசித்து வந்தனர்.
கடந்த 2016-ம் ஆண்டு பஸ்சில் பயணி ஒருவரிடம் நகை திருடிய வழக்கில் ஆர்.எஸ்.புரம் போலீசார் கவிதாவை கைது செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு கவிதாவுக்கு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சிவக்குமார் அவரை கண்டித்து உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக கவிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு சென்றார். பின்னர் அவர் தனது கள்ளக்காதலனுடன் கண்ணம்பாளையம் பிரிவில் வசித்து வந்தார்.
கோர்ட்டுக்கு வந்தார்
தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கவிதாவை சிவக்குமார் அழைத்தார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் கவிதா மீது சிவக்குமாருக்கு கோபம் ஏற்பட்டது. இந்தநிலையில், கவிதா மீதான திருட்டு வழக்கு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் ஆஜராகுவதற்காக கவிதா நேற்று காலையில் கோவை கோர்ட்டுக்கு வந்தார்.
இதை அறிந்த சிவக்குமாருக்கும் அங்கு வந்தார். அங்கு கவிதாவிடம் உன்னை பார்க்காமல் குழந்தைகள் சோகமாக உள்ளனர், என்னுடன் வந்து விடு, நாம் சந்தோஷமாக வாழலாம் என்று கூறி சிவகுமார் குடும்பம் நடத்த அழைத்து உள்ளார்.
வெளியே அமர்ந்து இருந்தார்
ஆனால் எவ்வித பதிலும் சொல்லாமல் நின்ற கவிதா, எனக்கு கோர்ட்டு நேரம் ஆகிவிட்டது. இப்போது என்னை அழைத்துவிடுவார்கள் என்று கூறினார். இதனால் அங்கிருந்து சிவக்குமார் சென்றுவிட்டார். இந்த நிலையில், கவிதா வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, சாட்சி விசாரணை முடிந்த பிறகு அழைப்பதாக கூறியதால், கோர்ட்டுக்கு வெளியே குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் காத்திருக்கும் பகுதியில் கவிதா அமர்ந்து இருந்தார்.
திராவகம் வீச்சு
இதையடுத்து காலை 10.45 மணிக்கு சிவக்குமார் மீண்டும் அங்கு வந்தார். அப்போதும் கவிதா பேசாமல் நின்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார், நான் எவ்வளவு நேரம் அழைத்த பிறகும் நீ வீட்டுக்கு வர மாட்டியா என்றுக்கூறி, தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை திறந்து அதில் இருந்த திராவகத்தை கவிதா மீது வீசினார். அவரின் உடல் முழுவதும் திராவகம் பட்டு வெந்தது. இதனால் கவிதா வலியால் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வக்கீல்கள் ஓடி வந்து காயத்துடன் உயிருக்கு போராடிய கவிதாவை மீட்டு, அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், திராவகம் வீசப்பட்டதில் 85 சதவீதம் அளவுக்கு கவிதாவின் உடல்வெந்து இருப்பதாக கூறினர்.
கைது
இதற்கிடையே தப்பியோட முயன்ற சிவக்குமாரை அங்கு நின்ற வக்கீல்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பட்டப்பகலில் கோர்ட்டு வளாகத்தில் மனைவி மீது கணவர் திராவகம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.