கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
ஊட்டியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி
ஊட்டியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுரவ விரிவுரையாளர்கள்
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் எழுத்து தேர்வு முறையை கைவிட்டு நேர்காணல் முறையையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும், சட்ட கல்லூரிகளில் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதை போல தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 87 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.
போராட்டம்
இவர்களை இதுவரை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளது. இதனால் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறும்போது, தற்போது பணியாற்றி வரும் கவுரவ விரிவுகளையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு எழுத்து தேர்வு வைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு எழுத்து தேர்வு வைக்க கூடாது. பணி மூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.
கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிப்புக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.