தாய்மார்களின் உடல்நிலையை மேம்படுத்த வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாய்மார்களின் உடல்நிலையை மேம்படுத்த வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி கூறினார்.

Update: 2023-08-08 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்டத்தில் தாய்மார்களின் உடல்நிலையை மேம்படுத்த வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி கூறினார்.

உலக தாய்ப்பால் வார விழா

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் நடந்த உலக தாய்ப்பால் வார விழாவை, கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். பிரசவசத்தின்போது குழந்தை அல்லது தாய் இறப்பில்லாத நிலை உருவாக்குவதும், ஒரு குழந்தை கருவுற்றது முதல் பிறந்து வளர்வது வரை அவை வளர்ச்சியை கண்காணிப்பதும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 692 அங்கன்வாடி மையத்திலும் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.

வீடுகளுக்கு சென்று...

மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 75 கர்ப்பிணிகளும், 2 ஆயிரத்து 289 பாலூட்டும் தாய்மார்களும் உள்ளனர். இவர்களின் உடல்நிலையை மேம்படுத்த இணை உணவு, வீடுகளுக்கு நேரில் சென்று மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

பின்னர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை சார்பில் அடுப்பில்லா சமையல் செய்தல், மாடித்தோட்டம் அமைத்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கும், ஆரோக்கிய குழந்தை பராமரித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற பாலூட்டும் தாய்மார்கள் 6 பேருக்கும், போஷன் அபியான் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் 20 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

அதனைத்தொடர்ந்து உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலமானது புதிய பஸ் நிலையம் வரை சென்றது. ஊர்வலத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பதாகைகள் ஏந்தி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சுகாதார பணிகள் இணை இயக்குனர் குருநாதன்கந்தையா, துணை இயக்குனர் அஜித்பிரபுகுமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சியாமளா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேஷ், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிருத்திகா மற்றும் அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்