திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - கலெக்டர் உத்தரவு
மிககனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
முதல் மழைப்பொழிவு அடுத்த மாதம் நவம்பர் 4-ந் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. வருகிற நவம்பர் 1-ந் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளை அம்மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.