மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை

Update: 2022-12-09 18:45 GMT

தர்மபுரி:

மாண்டஸ் புயல் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (சனிக்கிழமை) பள்ளி கல்லூரிகளுக்கு 2-வது நாளாக விடுமுறை விடப்பட்டது.

லேசான மழை

மாண்டஸ் புயல் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் லேசான மழை பெய்தது. நாள் முழுவதும் விட்டு, விட்டு தூறலுடன் மழை பெய்தபடியே இருந்தது.

இதன் காரணமாக பகல் நேரத்திலேயே குளிர் காற்று வீசியது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் கணிசமாக குறைந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் சாலையில் வாகன போக்குவரத்தும் வழக்கத்தை விட சற்று குறைந்தது.

இரவில் கடுமையான குளிர் நிலவியது. இதனால் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அவதி அடைந்தனர். சிலர் மாலை நேரத்திலேயே வீடுகள் முன்பு தீ மூட்டி குளிர் காய்ந்ததையும் காண முடிந்தது.

இன்று விடுமுறை

இந்தநிலையில் மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக விடுமுறை அறிவித்து கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்