தொடர் விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்பரிசல் ஓட்டிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Update: 2023-04-09 19:00 GMT

பென்னாகரம்:

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிக தொகை வசூலிப்பதாக கூறி பரிசல் ஓட்டிகளிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒகேனக்கல்

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியல் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

இந்த நிலையில் 2 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்தனர்.

பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் அங்குள்ள கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் அதிகரிப்பால் போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதி யில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

வாக்குவாதம்

இதற்கிடையே சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லும்போது பரிசல் ஓட்டிகள் அரசு விதித்த கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிப்பதாக கூறி பரிசல் ஓட்டிகளிடம் சில சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது, 'பரிசல் சவாரி செய்வதற்கு ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் சில பரிசல் ஓட்டிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அதிக தொகை வசூலிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்