ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. ஒகேனக்கல்லில் 4-வது நாளாக பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-15 19:00 GMT

ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. ஒகேனக்கல்லில் 4-வது நாளாக பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, ராசிமணல், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

எனினும் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து கூடுவதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று 4-வது நாளாக நீடிக்கிறது. இதன் காரணமாக நேற்று விடுமுறை நாளில் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மேட்டூர் அணை

அதே நேரத்தில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு கடந்த 4 ஆண்டுகளாக குடிநீர், பாசன தேவைக்கு போதுமானதாக இருந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகம், கர்நாடகம், கேரள மாநிலங்களில் கைகொடுக்கவில்லை. இதனால் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வர வேண்டிய தண்ணீர் வரவில்லை. எனவே மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசன தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 30 அடிக்கு கீழே சென்றதால் டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்மட்டம் உயர்வு

இந்தநிலையில் கர்நாடகம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 18 ஆயிரத்து 633 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அதேபோல் அணையின் நீர்மட்டமும் 38.60 அடியாக இருந்தது.

நேற்று நீர்வரத்து குறைந்து அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 31 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் 41.61 அடியாக உயர்ந்துள்ளது.

பருவமழை

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை. மேலும் வருகிற 23-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே வடகிழக்கு பருவமழையாவது தீவிரம் அடையும்பட்சத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

அப்போது டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே வடகிழக்கு பருவமழை கைகொடுக்க வேண்டும் என்று இப்போதே காவிரி ஆற்றில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளும் வருணபகவானை ேவண்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்