தென்னகத்தின் நயாகரா; சுற்றுலா தலமான ஒகேனக்கல் மேம்படுத்தப்படுமா?-எதிர்பார்த்து காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்

Update: 2022-10-06 18:45 GMT

பென்னாகரம்:

தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் சுற்றுலா தலமான ஒகேனக்கல் மேம்படுத்தப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தென்னகத்தின் நயாகரா

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்கிறார்கள். காவிரி ஆறு பல அருவிகளாக ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஒகேனக்கல் தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது.

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றின் இயற்கை அழகை ரசிக்கவும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் இங்கு வந்து செல்கிறார்கள். இதேபோல் ஆன்மிக ரீதியாக சிறப்பிடம் பெற்ற ஒகேனக்கல் காவிரி அம்மன் கோவில், தேசநாதேஸ்வரர் கோவில் ஆகியவற்றிற்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

ஆடி மாதத்திலும், ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபடுகிறார்கள்.

சிறப்பு வசதிகள்

இப்படியாக சுற்றுலா மற்றும் ஆன்மிகத்துக்கு பெயர் பெற்ற ஒகேனக்கல் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக முதலை பண்ணை அருகே காவிரி ஆற்றில் புனித நீராடும் பெண் பக்தர்கள் துணி மாற்றுவதற்கு தனி இடத்துடன் உரிய வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பெண்கள் குளித்துவிட்டு துணி மாற்றுவதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.

விடுமுறை நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருகிறார்கள். அருவிகள், தொங்கு பாலம் உள்ளிட்ட அம்சங்களை தவிர சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான சிறப்பு வசதிகள் ஒகேனக்கல்லில் இதுவரை குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்தப்படவில்லை.

அடிப்படை தேவைகள்

இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட வனத்துறை பூங்கா, சிறுவர் பூங்கா ஆகியவை முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இதேபோல் சுற்றுலா வரும் சிறுவர்-சிறுமிகளை கவர்ந்த வண்ண மீன் காட்சியகம் தற்போது மூடி வைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நட்சத்திர பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் செடிகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. ஒகேனக்கல்லை சர்வதேச தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இங்கு சுற்றுலா பயணிகளுக்கு வேண்டிய அடிப்படை தேவைகளை போதிய அளவில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு

பென்னாகரத்தை சேர்ந்த தேவகி:-

பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அருவி, தொங்கு பாலம் உள்ளிட்ட அம்சங்களை தவிர வேறு எதுவும் இல்லை. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த வனத்துறை பூங்கா, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஒகேனக்கல்லில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இங்கு தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதை தடுக்க உரிய மாற்று பொருள்களை இங்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதேபோல் காவிரி ஆறு ஓடும் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்கான கட்டமைப்பு வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மேலும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவதற்கு பொது கழிப்பிட வளாகங்கள் போதிய அளவில் இல்லை.

நல்லாம்பட்டியை சேர்ந்த அசோக்:-

ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதோடு மட்டுமல்லாமல் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி ஆகியவற்றின் இயற்கை அழகினை கண்டு ரசிப்பார்கள். இந்தநிலையில் வெள்ளப்பெருக்கின் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்தருவியை பார்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பார்வை கோபுரம் சேதமடைந்தது. இந்த பார்வை கோபுரத்தை சீரமைக்க வேண்டும். சினிஅருவியில் தடுப்பு கம்பிகள் அமைத்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

சுற்றுலா துறையே ஏற்க வேண்டும்

பென்னாகரத்தை சேர்ந்த பிரணவ்குமார்:-

ஒகேனக்கல் அருவியின் நுழைவு பகுதியில் வனத்துறை சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா இருந்தது. இந்த பூங்காவில் மான், மலைப்பாம்பு, மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் இருந்தன. இவற்றை காண ஏராளமானோர் வருவது வழக்கம். தற்போது இந்த பூங்கா முழுமையாக மூடப்பட்டு விட்டது. ஆகவே இந்த பூங்காவை மீண்டும் திறக்க வேண்டும். ஒகேனக்கல் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள், கழிவு பொருட்கள் கொட்டப்படுவதை தடுக்க தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

திரைப்பட காட்சிகளை படம் பிடிக்கும் இடங்களை மேம்படுத்தி அவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். ஒகேனக்கல் சுற்றுலா தலத்தின் பராமரிப்பை சுற்றுலா துறையே முழுமையாக மேற்கொள்ள வேண்டும். இந்த சுற்றுலா தலத்தை மேம்படுத்த அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை காலதாமதம் இல்லாமல் விரைவாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்