சிவாஜி சிலை உடைக்கப்பட்டதை கண்டித்துஇந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சிவாஜி சிலை உடைக்கப்பட்டதை கண்டித்துஇந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
குழித்துறை:
வட்டவிளை தோட்டத்துமடம் நவநீத கிருஷ்ணன் கோவில் அருகே 9 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு உடைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து வட்டவிளை சந்திப்பில் இந்து அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோவில் கூட்டமைப்பு மேல்புறம் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் மேல்புறம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சேகர், நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் அய்யப்பன், ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான அய்யப்பா சேவா சமாஜம் மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா, பாகோடு பேரூராட்சி கவுன்சிலர் சுகுமாரன், துளசி, ரெங்கபாய் மற்றும் மேல்புறம் ஒன்றிய பார்வையாளர் சுடர்சன், மாநில வக்கீல் அணி செயலாளர் சஜீ, மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் சவாக்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.