நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-03 18:30 GMT

சாலை பணியாளர் பணி வழங்கிய மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான நேற்று தற்போதைய முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரம்பலூர் கோட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தை மாநில செயலாளர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் ஆகியோர் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி அனந்தன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5,200, ரூ.20,200, தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும். ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும். இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத்துறையிலேயே விரைந்து பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை அஞ்சல் அட்டையில் எழுதி, அதனை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்-அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநில நிர்வாகிகள் வருகிற 14-ந்தேதி தமிழக முதல்-அமைச்சரையும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரையும் சந்தித்து மனு அளிக்கவுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்