உயர்கல்வி வழிகாட்டு குழு ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சியில் உயர்கல்வி வழிகாட்டு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-25 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் உயர்கல்வி வழிகாட்டு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

29 பள்ளிகளில் குழு அமைப்பு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குதல் குழு குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் முருகேசன் தலைமை தாங்கி பேசினார். இதில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளி படிப்பை முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. தமிழகத்தின் உயர்கல்வியின் விகிதத்தை 51 சதவீதத்தில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 100 சதவீதமாக உயர்த்துவது உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் நோக்கமாகும். நடப்பாண்டில் இந்த திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது. 29 பள்ளிகளில் 438 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மாணவர்கள் இடைநிற்றல்

இந்த குழுவினர் பள்ளியில் இருந்து இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள வேண்டும். மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் குழு உருவாக்கி வருகிற 6-ந்தேதி முதல் தினமும் கல்லூரி கனவு நிகழ்வுகள், தகவல்கள், வழங்கப்பட உள்ள பயிற்சிகள், கல்லூரி சேர்க்கை விவரங்கள் குறித்த தகவல்களை பகிர வேண்டும். மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் தனி, தனியாக நேரம் ஒதுக்கி ஆலோசனை வழங்க வேண்டும்.

10- ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத பள்ளி இடை நின்ற மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர தகுந்த வாய்ப்பை உருவாக்குகிற வகையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு படித்து உயர் கல்வியை தொடராத மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கு வழிகாட்டும் இந்த ஆலோசனைக்குழுவை அணுகி உயர் கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்