மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விதிகளை மீறி தாறுமாறாக வாகனங்களை இயக்கும் சிறுவர்களால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
விதிமீறல்
சாலை விபத்துகளால் ஏற்படும் ஊனம் மற்றும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தரமற்ற சாலைகள், அதி வேகம், குடி போதையில் வாகனங்களை இயக்குவது என பலவிதமான காரணங்கள் கூறப்படுகிறது.
ஆனால் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்குவதே பல விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. அதிலும் சிறுவர் சிறுமிகள் இயக்கும் வாகனங்கள், பல விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.
சிறை தண்டனை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மோட்டார் வாகனச்சட்டத்தின் படி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் சிறுவர்கள் மற்றும் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்வதை போலீசார் தவிர்த்து விடுகின்றனர்.
இதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு பல பெற்றோர் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடம் ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மட்டுமல்லாமல் கார்களையும் கொடுத்து அனுப்பும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் மடத்துக்குளம் பகுதியில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பலரும் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
விழிப்புணர்வு
அதிலும் சிறுவர்கள் ஒரு மோட்டார்சைக்கிளில் 5 பேர் வரை ஏற்றிச் செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.
மேலும் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளில் பறக்கின்றனர். கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த சாலைகளில் அதி வேகத்தில் செல்லும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் டியூசன் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் ஸ்கூட்டர்களில் பயணிக்கின்றனர்.
எனவே போலீசார் பள்ளிகள் மற்றும் பெற்றோர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கடுமையான நடவடிக்கைகள் மூலமே விதிமீறல்கள் மற்றும் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சிறுவர்கள் இயக்கும் வாகனம் அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.