போடி - சென்னை சென்டிரல் இடையே அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை -மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்

போடி-சென்னை சென்டிரல் இடையிலான அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மற்றும் போடி-மதுரை பயணிகள் ரெயில் சேவையை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-16 00:07 GMT
போடி - சென்னை சென்டிரல் இடையே அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை -மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்

தேனி,

மதுரை - தேனி மாவட்டம் போடி இடையே 90 கிலோமீட்டர் தூரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டிருந்த மீட்டர்கேஜ் ரெயில்பாதை அகற்றப்பட்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது.

மதுரையில் இருந்து தேனி வரை 75 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெயில்பாதை பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் மதுரை-தேனி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

சேவை நீட்டிப்பு

அதன்பிறகு தேனியில் இருந்து போடி வரையிலான பணிகளும் நிறைவு பெற்றன. இதையடுத்து மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் சேவையை போடி வரை நீட்டிக்க ரெயில்வே துறை அனுமதி அளித்தது.

இதேபோல், தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் சேவை தொடங்க வேண்டும் என்று மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வரை வாரம் 3 முறை இயக்கப்பட்டு வந்த அதிவேக (சூப்பர் பாஸ்ட்) எக்ஸ்பிரஸ் ரெயிலை போடி வரை நீட்டித்தும் ரெயில்வே துறை அனுமதி அளித்தது.

தொடக்க விழா

போடி வரை நீட்டிக்கப்பட்ட ரெயில் சேவைகள் தொடக்க விழா போடி ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு போடி-மதுரை பயணிகள் ரெயில், போடி-சென்னை சென்டிரல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய 2 ரெயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

இரவு 8.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலையும், இதைத்தொடர்ந்து மதுரைக்கு செல்லும் ரெயிலையும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரெயில்களில் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்