கொரோனாவால் உயிரிழந்த அரசு பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வெளியிட்ட கொள்கையை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்த அரசு பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வெளியிட்ட கொள்கையை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது

Update: 2023-08-14 15:17 GMT

சென்னை ,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்த தங்கலட்சுமி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு பணியின்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து தனது மனைவியின் இறப்புக்கு இழப்பீடாக மாநில அரசு ரூ.50 லட்சம் வழங்க உத்தரவிடக் கோரி அவரது கணவர் அருணாசலம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர் பிரதம மந்திரி கரிப் கல்யாண் பேக்கேஜ் என்ற காப்பீட்டு திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாயை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளார் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அருணாசலம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், 'மத்திய அரசு வழங்கிய 50 லட்சம் ரூபாயை பொறுத்தமட்டில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தான் வழங்கியது. மாநில அரசு அறிவித்தது போன்று இழப்பீடு வழங்கப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கொரோனாவால் உயிரிழந்த அரசு பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வெளியிட்ட கொள்கையை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 26-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்