சாதி மறுப்பு திருமணம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த ஐகோர்ட்டு அனுமதி

பொதுவெளியில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டால் தான் பொதுமக்களிடம் அது சென்றடையும் என ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2023-03-10 12:23 GMT

சென்னை,

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட உடுமலை சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது மனைவி கவுசல்யா, 'சங்கர் சமூக நீதி அறக்கட்டளை' என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மூலம் சாதி மறுப்பு திருமணம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நடப்பாண்டு சங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு மார்ச் 12-ந்தேதி மாலை உடுமலை குமாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே கூட்டம் நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என காவல்துறையிடம் கவுசல்யா விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தை காவல்துறை நிராகரித்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கவுசல்யா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், சங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை, மாறாக உள்ளரங்கு கூட்டமாக நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தை நடத்துவதற்கு தங்களுக்கு விருப்பம் இல்லை என்று சங்கரின் சகோதரர் மனு அளித்துள்ளதாகவும், அங்கு அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெற வாய்ப்பு இருப்பதால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஆணவக்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொதுவெளியில் நடத்தப்பட்டால் தான் பொதுமக்களிடம் அது சென்றடையும் என்றும், நினைவேந்தல் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்