மருமகளை வீட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கை ரத்து

மருமகளை வீட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-08-31 19:31 GMT


மதுரை சூர்யாநகரைச் சேர்ந்த காயத்ரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து, அவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருகிறேன்.

எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவர் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர். தற்போது எனது மாமனார் அம்பிகாபதி, மாமியார் ஆகியோரை நான் துன்புறுத்துவதாக மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் தற்போது நான் வசிக்கும் வீட்டில் இருந்து போலீசாரின் உதவியுடன் என்னை வெளியேற்றி, அந்த வீட்டை எனது மாமனார், மாமியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரருக்கு எதிராக மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. மனுதாரருக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.

விசாரணை முடிவில், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்படி மூத்த குடிமக்களான மனுதாரரின் மாமனார், மாமியாருக்கு அவர் நேரடியான உறவோ, வாரிசோ கிடையாது. எனவே இந்த சட்டம் மருமகளுக்கு பொருந்தாது. எனவே மனுதாரருக்கு எதிரான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்