தேவகோட்டை அருகே 2 பெண்களை கொன்று திருமண நகைகளை கொள்ளையடித்த கும்பல்-போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அளித்த உதவியால் 55 பவுன் நகை சேர்ந்தது

தேவகோட்டை அருகே ெகாலை செய்யப்பட்ட 2 பெண்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகைகளை பறிக்கொடுத்த மணப்பெண்ணுக்காக போராட்டம் நடத்திய இடத்திலேயே உறவினர்கள் 55 பவுன் நகைகளை சேர்த்தனர்.

Update: 2023-01-14 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை அருகே ெகாலை செய்யப்பட்ட 2 பெண்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகைகளை பறிக்கொடுத்த மணப்பெண்ணுக்காக போராட்டம் நடத்திய இடத்திலேயே உறவினர்கள் 55 பவுன் நகைகளை சேர்த்தனர்.

நகை வாங்கினர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி கனகம்(வயது 65). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இதில் கனகத்தின் மகன் பாலசுப்பிரமணியம் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கனகத்தின் இளைய மகளான வேலுமதியை (35) பாகடி கிராமத்தைச் சேர்ந்த குமாருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். குமார் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இதனால் வேலுமதி, தனது மகன் மூவரசுடன்(12) தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கனகத்தின் மூத்த மகள் சாந்தி, தாணிச்சாவூரணி கிராமத்தில் உள்ளார். அவரது மகளுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இந்த திருமணத்திற்காக கடந்த 10-ந்தேதி நகைக்கடைக்கு சென்று 49 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், பட்டுப்புடவைகள் வாங்கி, அவை அனைத்தும் கனகம் வீட்டில் வைக்கப்பட்டு இருந்தன.

தாய்-இளம்பெண் கொலை

சம்பவத்தன்று இரவில் கனகத்தின் வீட்டில், கனகம், அவருடைய மகள் வேலுமதி, பேரன் மூவரசு ஆகியோர் ஹாலில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், வேலுமதி தலையில் இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் அவரை படுகொலை செய்தனர். கனகத்தையும், மூவரசையும் அரிவாளால் வெட்டினார்கள். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகை, வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.

இதில் படுகாயம் அடைந்த கனகம், தேவகோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பலனின்றி இறந்தார். சிறுவன் மூவரசு, மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது..

உடல்கள் ஒப்படைப்பு

கொலை செய்யப்பட்ட கனகம், அவரது மகள் வேலுமதி உடல்களை வாங்க மறுத்து கடந்த 3 நாட்களாக உறவினர்கள் கண்ணங்கோட்டை கிராமத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது.

தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர், 2 பேர் உடல்களையும் பெற்றுக் கொள்வது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஆர்.ராமசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

மூதாட்டி கனகமும், அவருடைய மகளும் கொல்லப்பட்டு உள்ளனர். கனகத்தின் பேத்திக்காக வாங்கிய நகைகள் கொலையாளிகள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். ஆனால், அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயித்தபடி நடக்க வேண்டும். ஆகவே தங்களால் இயன்றதை செய்யுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் உதவ முன்வந்தனர். கிராம வாரியாகவும் உதவிகள் வழங்கப்பட்டன. அப்போதே 55 பவுன் நகை சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் நேரில் ஆறுதல்

போராட்டம் நடந்த இடத்துக்கு வந்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். இதையடுத்து அமைச்சர் ேக.ஆர்.பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கொடூர கொலை சம்பவம் சிவகங்கை மாவட்டத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

.தமிழக அரசின் சார்பிலும் எங்களின் சார்பிலும் இந்த குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்வோம். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில், இரங்கல் தெரிவிக்க வந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடல்கள் தகனம்

பின்னர் நடந்த பேச்சுவார்த்தயைில் உடன்பாடு ஏற்பட்டதால் தாய்-மகள் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்பட்டன.

முன்னதாக நேற்று நடந்த போராட்டத்தின்போது, பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லாகணேசன், கண்ணங்குடி யூனியன் தலைவர் சித்தனூர் கார்த்திக் மெய்யப்பன், ஆவின் சேர்மன் கே.ஆர்.அசோகன், அ.ம.மு.க. மாவட்டசெயலாளர் தேர்போகி பாண்டி, கல்லங்குடி கருப்பையா, நாட்டுத்தலைவர்கள் உஞ்சனை ராமசாமி அம்பலம், செம்பொன்மாரி ராமசாமி அம்பலம், இறகுசேரி ரெகுநாதன் அம்பலம், தென்னிலை கணேசன், சுப்பிரமணியன், மற்றும் கண்டதேவி முருகன் அம்பலம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்