இருசக்கர வாகனத்தில் சென்றால் தலைக்கவசம் அவசியம்

Update: 2023-04-26 17:28 GMT


இருசக்கர வாகனத்தில் சென்றால் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை பெற்றோரிடம் வலியுறுத்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் வினீத் அறிவுரை வழங்கினார்.

விழிப்புணர்வு பிரசாரம்

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி அமுதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் பேசும்போது, 'திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக்கூடாது. வீட்டில் இருந்து வெளியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் வலியுறுத்த வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது' என்றார்.

இருசக்கர வாகனத்தில் சென்றால் தலைக்கவசம் அவசியம்

மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பேசும்போது, 'திருப்பூர் மாநகர பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று பலியானவர்கள் 90 பேர் ஆவார்கள். இவர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். அதில் 22 பேர் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் பலியாகி உள்ளனர். இருசக்கர வாகனத்தில் ஓட்டுனர், பின்னால் அமர்ந்து இருப்பவர் 2 பேரும் தலைக்கவசம் அணிவது அவசியம். அப்போது தான் விபத்தில் சிக்கினாலும் உயிரை காப்பாற்ற முடியும். மாநகரில் 30 பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது' என்றார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 'தலைக்கவசம் போடுங்க, சாவி எடுங்க' என்பதை நினைவில் கொண்டு இருசக்கர வாகனத்தை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. தங்கள் பெற்றோர் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்த மாணவ-மாணவிகளுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது. இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்