அனுமதி பெறாமல் நடைபெற்றகட்டுமான பணிகள் தடுத்து நிறுத்தம்:கம்பம் நகராட்சி சார்பில் நோட்டீஸ்

அனுமதி பெறாமல் நடைபெற்ற கட்டுமான பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் கம்பம் நகராட்சி சார்பில் நோட்டீசும் வழங்கப்பட்டது.

Update: 2023-06-09 18:45 GMT

கூடலூரைச் சேர்ந்தவர் ஹக்கீம். இவரது மனைவி பல்கீஸ் பேகம். இவர், கூடலூர் நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் கம்பம் நகராட்சி 4-வது வார்டு செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் கடைகள் கட்டி வருகிறார். இந்த நிலையில் பல்கீஸ் பேகத்திற்கு கம்பம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் கட்டிடம் கட்ட அனுமதி பெறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அனுமதி பெறாமல் அவர் கட்டுமான பணிகளை தொடர்ந்தார்.

இதையடுத்து 2-வது முறையாக கடந்த மாதம் 26-ந்தேதி நகராட்சி நிர்வாகம் சார்பில், கடிதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கட்டிடம் கட்ட அனுமதி பெறாமல் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அதிகாரிகள் கட்டிட பணி நடைபெறும் இடத்திற்கு நேற்று சென்றனர். பின்னர் கட்டிடத்தில் அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றை ஒட்டினர். அதில் அனுமதி பெறாமல் கட்டிட பணி நடைபெறுகிறது. எனவே கட்டிட பணிகளை நிறுத்த வேண்டும். மீறினால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்