தூத்துக்குடியில் நடந்தமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்321 பேர் கோரிக்கை மனு
தூத்துக்குடியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 321 பேர் கலெக்டர் செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் நேற்றுநடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 321 பேர் கலெக்டர் செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 321 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
தொழில்முனைவோருக்கு மானியம்
கூட்டத்தில் சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிந்த போது இறந்த, மட்டக்கடையைச் சேர்ந்த எட்வர்ட் ராஜசேகர் என்பவருக்கு வரப்பெற்ற இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து 147-க்கான காசோலையை, அவரது வாரிசுதாரரான அசன்ஸியிடம் கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
மேலும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கோவில்பட்டி தாலுகா இலுப்பையூரணியில் ஸ்ரீமதி என்பவருக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோர் ஆக்குதல் திட்ட மூலதன மானியம் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.